நாகர்கோவில் காய்கறி சந்தை மற்றும் தற்காலிக காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சந்தை மூடப்பட்டதால் காய்கறி மற்றும் பழவகைகள் கெட்டுப்போகும் வாய்ப்புள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தொடர்ந்து அதிகாரிகள் பலத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளித்தல் உட்பட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இத்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் நகரில் முக்கிய வியாபார ஸ்தலங்களாலான கோட்டார், வடசேரி காய்கறி சந்தை மற்றும் அப்டா மார்க்கெட் பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து அந்த பகுதிகள் மூடப்பட்டு அங்கு கிருமிநாசினி தெளிப்பது உட்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த இடங்கள் உள்ளன. வடசேரி காய்கறி சந்தை மூடப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகிறது. இந்த சந்தை கடைகளில் காய்கறி மற்றும் பழவகைகள் உள்ளன. கடைகள் மூடப்பட்டதால் காய்கனிகள் மற்றும் பழவகைகள் அழுகி போக வாய்ப்புள்ளது. அழுகும் பட்டச்சத்தில் துர்நாற்றம் வீசும் வாய்ப்பு ஏற்படுவதுடன் நோய்கள் பரவவும் வாய்ப்பு ஏற்படும். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.