கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் நள்ளிரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளிலும் வாலிபர்கள் பைக் ரேஸ் நடத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், இளைஞர்கள் போதையில் வாகனம் ஓட்டுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாலிபர்கள் சிலரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். ஆனால் அவர்கள் மது அருந்தியதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், கருங்கல் பகுதியில் பெரிய நெட்வொர்க் அமைத்து கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இதில் வடமாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் இருப்பதும் தெரியவந்தது.
வெளியூர்களில் இருந்து கஞ்சாவை மூடைகளில் வாங்கிவந்து, ரகசிய இடத்தில் வைத்து சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து ஒரு பொட்டலம் ரூ.400, ரூ.500 என விற்பனை செய்துள்ளனர். இதில் நல்ல லாபம் கிடைப்பதால் பட்டதாரிகள் உள்பட பலர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலையில்லாத பட்டதாரிகள், கூலி வேலை செய்யும் இளைஞர்கள் உள்ளனர்.
கஞ்சா கும்பலுக்கு நிரந்தர இடம் கிடையாது. அவ்வப்போது வரும் கோரிக்கைகளுக்கு ஏற்ப பைக்கில் எடுத்து சென்று போகும் வழியிலேயே கஞ்சாவை சப்ளை செய்துவிட்டு சென்று விடுவர். இதனால் கருங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை மிக, மிக ரகசியமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கருங்கல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையில் போலீசார் கஞ்சா கும்பலை கூண்டோடு பிடிக்க வியூகம் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் சில தினங்களுக்கு முன் சந்தேகத்தின் அடிப்படையில் சில வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் கஞ்சா கும்பலுடன் தொடர்பு உள்ளவர்கள் என தெரியவந்தது.
இதன்படி, கருங்கல் ஆர்சி தெருவை சேர்ந்த ஜீனு (24), திப்பிறமலை ஷாஜன் (21), பள்ளியாடியை சேர்ந்த கென்சோ (28), கீழ்குளம் பகுதியை சேர்ந்த ஜெரோம் மேக்ஸ் (26), பள்ளியாடியை சேர்ந்த தினேஷ்ராஜ் (28), ஆர்சி தெருவை சேர்ந்த ஜாண் கபோடு (35) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் போதை ஊசி மருந்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.






0 Comments