பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தன் மகனை நேற்று அடையாளம் கண்டு, சைகை காட்டி நலம் விசாரித்தது, அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும் நிலையில், நுரையீரல் பாதிப்பை சரி செய்யும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.எஸ்.பி.பி., மகன் சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில், 'என் தந்தையின் உடல் நிலை சீராக உள்ளது;நினைவுடன் உள்ளார். 'என்னை அடையாளம் கண்டுகொண்டார்.

'நீங்கள் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்' என, அவரிடம் தெரிவித்தேன். என்னையும், என் தாயின் உடல் நலத்தையும், சைகை காட்டி கேட்டறிந்தார்.'என் தந்தை, விரைவில் பூரண குணமடைந்து, அனைவரையும் சந்திப்பார். மருத்துவக் குழுவினர், அவரை மீட்டெடுக்க அளித்து வரும் சிகிச்சைக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.

இந்த தகவல், உலகம் முழுதும் இருக்கும் எஸ்.பி.பி.,யின் லட்சோப லட்சம் ரசிகர்கள் மத்தியில், மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'எஸ்.பி.பி.,க்கு எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.'அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.