ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளது. இங்கு கொட்டாரம் அருகே அச்சன்குளத்தை சேர்ந்த ஞானமணி (வயது 51) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் காற்றாலையில் மின் விளக்குகளை போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த பகுதியில் புதருக்குள் இருந்து 2 கரடிகள் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்தது.
இதில் நிலைகுலைந்த ஞானமணி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவர் மீது 2 கரடிகளும் பாய்ந்து கடித்து குதறின.
இதில் பலத்த காயமடைந்த அவர் அலறி துடித்தார். இறுதியில் கரடிகள் ஞானமணியின் காலில் கிடந்த செருப்பை கவ்வி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடின.
இதுகுறித்து தகவல் அறிந்த அலுவலக சக ஊழியர்கள் ஞானமணியை மீட்டு ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு முன்பு பொய்கை அணை பகுதியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் கரடியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். பின்னர் நீண்டநாள் சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பினார்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் புகாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காற்றாலை மேலாளர் கரடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






0 Comments