குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மலைவாழ் மக்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுப்பு. வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோதையாறு, குற்றியார் உட்பட்ட 6 மலையோர கிராமங்களில் சுமார் 10000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு அறிவித்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு கழிவறை கட்டுவதற்காக பேச்சிப்பாறை ஊராட்சியிலிருந்து கட்டுமான பொருட்களை வாகனத்தில் கொண்டு சென்றனர். இந்த வாகனத்தை சீரோ பாயின்ட் வன சோதனை சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த வாகனத்தை மலை கிராமங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மலைவாழ் மக்கள் வனத்துறை சோதனை சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடம் வந்த அருமனை போலீசார் மலைவாழ்மக்களிடமும், வனத்துறையினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்தையினர் அனுமதி வழங்கினர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடிக்காரம்கோணத்திலிருந்து கீரிப்பாறைக்கு கட்டுமான பொருள்களை ஏற்றிச்சென்ற வானத்தையும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.