ஆரல்வாய்மொழியில் ஒரே நாளில் வியாபாரிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று தடுப்பு நடவடிக்கையாக மீன்சந்தை மூடப்பட்டது.

குமரி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, சந்தைகள், கடை வீதிகள் போன்ற இடங்களில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் வியாபாரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இந்தநிலையில் ஆரல்வாய்மொழி மீன்சந்தை பகுதியில் 2 நாட்களுக்கு முன் சுகாதாரத்துறை சார்பில் கடை வியாபாரிகள், பொதுமக்கள் என 48 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அதன் முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில், மீன்சந்தை பகுதியில் உள்ள 60 வயது டீக்கடைக்காரர், 50 வயது பழக்கடை உரிமையாளர், 40 வயது கோழிக்கடை ஊழியர் உள்பட 9 பேருக்கும், ஆரல்வாய்மொழி முத்துநகரை சேர்ந்த 40 வயது ஆண், பாரதி நகரை சேர்ந்த 35 வயது வாலிபருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று அவர்கள் 11 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.
தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு பிளச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. அவர்கள் குடும்பத்தினருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் உத்தரவின் பேரில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி தலைமையிலான ஊழியர்கள் மீன்சந்தையை மூடினர். ஆரல்வாய்மொழி பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.






0 Comments