குமரி மாவட்ட கடலில் மூழ்கியவரின் சடலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து, மரபணு சோதனை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தேங்காய்ப்பட்டினத்தை அடுத்த முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த சீலன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு: நானும் எனது தந்தை ஆண்டனியும் கடந்த 23ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றோம். அப்போது கடல் அலை சீற்றம் காரணமாக புறப்பட்ட இடத்திலேயே வள்ளம் கவிழ்ந்து எனது தந்தை கடலில் விழுந்து மாயமானாா். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மாா்த்தாண்டம் துறையைச் சோ்ந்த 24 வயது மதிக்கத்தக்க சிபு என்பவரும் கடல் சீற்றம் காரணமாக காணாமல் போய்விட்டாா். இதனால் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சடலத்தை மரபணு சோதனைக்கு அனுப்பி அந்த முடிவு வந்த பிறகு சடலத்தை உரியவரிடம் ஒப்படைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.