மக்கள் சிரமமின்றி பயணிக்க, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து, ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பொது பேருந்து சேவை, ரயில் சேவைகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இ-பாஸ் நடைமுறையால் பல சிக்கல்கள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திவந்தனர். அரசியல் தலைவர்கள் சிலரும் இ-பாஸ் முறையை ரத்து செய்யவேண்டி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், திருமணம், அவசர மருத்துவம், உறவினர் மரணம் உள்ளிட்ட சிலவற்றிற்காக இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லும் மக்களை அரசு கண்காணித்துவந்தது. இந்த நிலையில், பொதுமக்கள் தமிழகத்திற்குள் எந்தவித சிரமம் இன்றி பயணிக்க, ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ரேஷன் அட்டை அல்லது ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணையும் சேர்த்து விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி அவசர தேவைகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பித்துப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






0 Comments