தேங்காய் பட்டணம் துறைமுக முகத்துவாரத்தில் தேங்கியுள்ள மணலை அகற்றி ஆழப்படுத்தவும் , படகுகள் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க பாதுகாப்பாக சென்று வர துறைமுக முகத்துவாரத்தை அகலப்படுத்தி, கடலுக்குள் அலையை தடுக்கும் வகையில் பாதுகாப்பான முறையில் அலை தடுப்புச் சுவர் நீட்டித்து அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டும், பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

துறைமுகத்தில் ஏற்படும் விபத்தின் போது பாதிப்புக்குள்ளாகும் மீனவரை உடனடியாக மீட்டு மருத்துவமனை கொண்டு செல்ல வசதியாக துறைமுக வளாகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப் பட வேண்டும், அதுபோல் கடலில் மாயமாகும் மீனவரை உடனடியாக மீட்கும் விதத்தில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்க வேண்டும்.
12 நாட்டிக்கல் கடல் மைல் தாண்டி மாயமான மீனவனை தேட மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாத நிலை உள்ளது, ஆகவே இந்த சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தூத்தூர் மண்டல மீனவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சின்னத்துறையில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சின்னத்துறை பங்கு தந்தை டோனி டி.பால் தலைமை தாங்கினார். தூத்தூர் பங்கு தந்தை டாள், இரவிபுத்தன் துறை பங்கு தந்தை ஜெரோம், இரயுமன்துறை பங்கு தந்தை ரெஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீனவ வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி, மீனவ ஒருங்கிணைப்பு சங்க பொதுச்செயலாளர் ஆன்றோ லெனின், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜார்ஜ் ராபின்சன், கல்லூரி பேராசிரியர் அல்வாரிஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து மதியம் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் மீன்வளத்துறை துணை இயக்குநர் இளம்வழுதி, குளச்சல் ஏஎஸ்பி விஷ்வேஷ் பி சாஸ்திரி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் புதன்கிழமை துறைமுக முகத்துவாரத்தில் தேங்கியுள்ள மணலை அகற்றும் பணி ஆரம்பிக்கப்படும்.
என்றும் மீதி கோரிக்கைகளை முதல்வர் கவனத்தில் கொண்டு சென்று அதற்குரிய தீர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.






0 Comments