அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக மருத்துவ அணியில் மாநில இணைச் செயலாளராக இருந்தவர் மருத்துவர் விஜய். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆவார்.
இந்நிலையில் சமீபத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வேலூர் மாவட்ட அதிமுக செயலர் பதவியை விஜய் எதிர்பார்த்திருந்தாக தெரிகிறது. ஆனால் அப்பதவி அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளரான எஸ்.ஆர்.கே.அப்புக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே புகைச்சல் கிளம்பியதாக கூறப்படுகிறது. இச்சூழலில் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விஜய் திமுகவில் இணைந்துள்ளார். இது வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.