குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மழை வெள்ளத்துடன், சாக்கடை நீரும் கலந்து கருப்பு நிறத்துடன் ஓடியது.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆறு, வாய்க்கால்கள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 977 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 687 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 780 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு 155 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 170 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணைகளுக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 49.80 அடியாக இருந்த பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று 50.85 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 30 அடியை நெருங்கியது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை-11, பெருஞ்சாணி-30.4, சிற்றார்1- 16, சிற்றார்2-10, புத்தன்அணை-29.6, மாம்பழத்துறையாறு-21, பொய்கை-10.2, முக்கடல்-14, பூதப்பாண்டி-14.2, களியல்-8.6, கன்னிமார்- 21.2, கொட்டாரம்-26.8, குழித்துறை-14, மயிலாடி-9.2, நாகர்கோவில்-9.8, சுருளக்கோடு-26.8, தக்கலை-5.3, பாலமோர்-19.4, ஆரல்வாய்மொழி-10.2, கோழிப்போர்விளை-12, அடையாமடை-12, குருந்தன்கோடு-2.2, முள்ளங்கினாவிளை-28, ஆனைக்கிடங்கு-15.4 என்ற அளவில் மழை பதிவானது.

இதில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணைப்பகுதியில் 30.4 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி இருந்தது.