நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட பிரசர், சுகர், கேன்சர் ஆகிய நோயாளிகள் 3064 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் புள்ளி விவரங்களை ஆராயும் போது 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களினால் பதிக்கப்பட்டவர்களே அதிகமாக உயிரிழந்து உள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக கடந்த 17 ம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இணை நோயாக உயர் ரத்த அழுத்தத்துடன் சர்க்கரை நோய் இருந்தால் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பாதிப்பினை தவிர்க்கும் பொருட்டு சளி மாதிரி சேகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை சுகாதார துறை அரசு அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல் சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு அவர்கள் டயாலிசிஸ் பண்ணும் போது சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்திருந்தார்.

அதன்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசர், சுகர், கேன்சர் ஆகிய நோய்கள் உடையதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 3064 பேர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அறிவுரையின் படி மாநகர் நல அலுவலர் கின்சால் தலைமையில் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சளி மாதிரிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு வீடுகளில் வைத்தே சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் சளி மாதிரிகள் எடுக்கும் பணிகள் நடந்தது.