தமிழக முதல்-அமைச்சருக்கு, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் அழிக்கால் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுவதால் மக்கள் வசிப்பிடங்களை இழந்து தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்த மாதம் மட்டும் 3-வது முறையாக கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று கடல் சீற்றத்தால் பிரதீப் அஸ்வின் (வயது 27) என்ற மீனவ இளைஞர் மீது அவருடைய வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். எனவே அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு அழிக்கால் பிள்ளைத்தோப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்படாதது தான் காரணமாக உள்ளது.

தூண்டில் வளைவு அமைப்பதற்கு ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.