நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இன்று முதல் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது.
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை மூடப்பட்டு வடசேரி பஸ் ஸ்டாண்டில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது.அங்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்காலிக காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. தற்பொழுது மீண்டும் வடசேரி பஸ் ஸ்டாண்டில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும் வகையில் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இன்று (19 ம் தேதி) முதல் வடசேரி பஸ் ஸ்டாண்டில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட உள்ளது.

தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்தும், தெர்மல் ஸ்கேனிங் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறி வாங்கும் வகையில் கம்புகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், நாகர்கோவில் ஆர்டிஓ மயில், மாநகர் நல அலுவலர் கின்சால், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.