திருமணமாகாத நான் உறவுமுறை அண்ணனின் மனைவியை பைக்கில் கொண்டு சென்றதை பார்த்து கிண்டல் அடித்ததால் அவமானப்பட்ட நான் கட்டிட தொழிலாளியை கம்பியால் சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மரணமானார் என கைது செய்யப்பட்ட மரக்கடை உரிமையாளர் பரபரப்பாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த எட்டாம் தேதி முன்விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளியான விஜயராஜனை மரக்கடை உரிமையாளர் டார்வின் மற்றும் அவரது உறவினர் அஸ்வின் ஆகிய இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக காயப்படுத்தினர். அதே நாள் இரவில் ஆஸ்பத்திரியில் வைத்து விஜயராஜன் மரணமானார். விஜயராஜன் கொலை செய்த இரண்டு பேரையும் கைது செய்ய எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின்‌ பேரில் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆலோசனைப்படி தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தப் படையில் செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் தனிப்படை போலீசார் இரவு முழுவதும் முளகுமூடு, கோழிப்போர்விளை, குழிக்கோடு, கூட்ட மாவு, சடையங்கால், காட்டாத்துறை உட்பட பல ஊர்களில் விடிய விடிய தேடினர். இந்நிலையில் ஒன்பதாம் தேதி பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைய டார்வின் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள இரணியலில் நின்று கொண்டிருந்தார். தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர், தனிப்படை போலீசார் பத்மநாபபுரம், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் முன்னிலையில் டார்வினை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டார்வின் கொலைக்கான சம்பவம் குறித்து போலீசில் பரபரப்புடன் வாக்குமூலம் அளித்தார்.

அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

நான் காட்டாத்துறை அருகே உள்ள புதுக்காடு வெட்டிவிளையை சேர்ந்த அலெக்ஸ் மகன் டார்வின் ஆவேன். திருமணமாகவில்லை. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஆரம்ப காலத்தில் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் தொழில் செய்து வந்தேன். கடந்த 15 வருடங்களாக மர வேலை செய்து வந்தேன். இந்நிலையில் வெள்ளிக்கோடு அருகே மரக்கடை வைத்து நடத்தி வருகிறேன்.

எனது ஊரைச் சேர்ந்த பால்ராஜ் எனது உறவுமுறை அண்ணன் ஆவார். இதனால் அவரது மனைவியிடம் நெருக்கமாக பழகினேன். இதனால் அண்ணனுக்கு மனைவி மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தில் விரிசல் உருவானது. எனக்கும் அண்ணன் மனைவிக்கும் உள்ள தொடர்பை அண்ணன் அவரது நண்பர் விஜயராஜனிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்த நான் விஜயராஜனை சந்தித்து பால்ராஜுடன் நீ பேசக்கூடாது என பலமுறை கூறினேன். ஆனால் அதை விஜயராஜன் காதில் வாங்கிக் கொள்ளாமல் என்னை காணும் இடத்தில் எல்லாம் வைத்து கிண்டல் அடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் நான் பிந்துவை பைக்கில் அமர வைத்து கல்லுவிளை நோக்கி சென்று கொண்டிருந்தேன். இதை பார்த்த பால்ராஜுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட அடிதடியில் முடிந்தது. அண்ணனுக்கு ஆதரவாக விஜயராஜன் களமிறங்கி என்னை கிண்டல் அடித்து அடித்து உதைத்தார். இது எனக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் விஜயராஜனின் மீது கடும்கோபம் கொண்டிருந்தேன்.

இந்நிலையில் சம்பவ தினமான எட்டாம் தேதி நானும் காட்டாத்துறை புதுவல் விளையை சேர்ந்த எனது உறவுக்கார மைத்துனர் அஸ்வினும் டீக்கடை பக்கம் நின்று கொண்டிருந்தோம். அப்போது விஜயராஜன் பைக்கில் அந்தப் பக்கம் வழியாக வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த நானும், அஸ்வினும் சேர்ந்து விஜயராஜனை தடுத்து நிறுத்தியதில் வாக்குவாதம் நடந்தது. கடும் கோபம் கொண்ட நான் இரும்புக் கம்பியால் விஜயராஜனை சரமாரியாக அடித்து உதைக்க அஸ்வினும் அருகில் கிடந்த கம்பியை எடுத்து விஜயராஜனை வெளுத்துக்கட்டினான். அவர் பலத்த படுகாயம் அடைந்தார். அஸ்வின் கையிலிருந்த கம்பியை கீழே போட்டார். நான் அஸ்வினின் வீட்டருகில் கம்பியை போட்டுவிட்டு சென்று விட்டேன். இரவில் எங்களால் தாக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளி விஜயராஜன் இறந்ததாக கேள்விப்பட்டு தலைமறைவானோம்.

இந்நிலையில் நான் ஒன்பதாம் தேதி பகல் ஒரு மணி அளவில் பத்மநாபபுரம் கோர்ட்டில் சரணடைய தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள இரணியல் சாலையோரம் நின்று கொண்டிருந்தேன். அன்று முழு ஊரடங்கு என்பதால் கோர்ட்டில் சரணடைய முடியவில்லை. என் மீது சந்தேகம் கொண்ட யாரோ ஒருவர் தக்கலை போலீசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தக்கலை போலீசார் நான் நின்ற இடம் வந்து பத்மநாபபுரம் ஏ கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் முன்னிலையில் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று கொலைக்கு பயன்படுத்திய கம்பியை நான் காட்டிக்கொடுக்க அவர்கள் அதை எடுத்துக் கொண்டனர். என பரபரப்புடன் வாக்குமூலம் கொடுத்தார். கைது செய்யப்பட்ட டார்வின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.