ஐந்து மாத இடைவெளிக்கு பின் நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் திறந்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதி வாக்கில் சீனாவில் மையங்கொண்ட கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, வளைகுடாநாடுகள், இந்தியா மற்றும் பல நாடுகளிலும் பரவியது.
200-க்கும் மேற்பட்ட நாடுகளை துவம்சம் செய்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் கூட வழிபாட்டு தலங்களில் நடத்த அனுமதிக்கப்படாததால் வீடுகளில் எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது. சில முக்கிய இந்து கோயில்களை பொறுத்தவரை முக்கியமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஊரக பகுதிகளில் உள்ள சிறு வழிபாட்டு தலங்கள் மட்டும் திறந்து செயல்பட்டன.

சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாக முக்கிய வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாததால் பொதுமக்கள் பரிதவித்தனர். கட்டுப்பாடுகளுடன் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறந்து செயல்படலாம் என மாநில அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறந்து செயல்பட தொடங்கின. பக்தர்களும் ஆர்வமுடன் சென்று வழிபாடு மற்றும் ஆராதனைகளில் கலந்து கொண்டனர். வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், வழிபாட்டு தலங்களின் முன் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இன்னும் சில மாதங்களுக்கு இதேநிலை தொடர வேண்டி உள்ள போதிலும் நீண்ட இடைவெளிக்கு பின் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.